தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 71.08 சதவீதம் வாக்குப்பதிவு


தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 71.08 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:00 AM IST (Updated: 31 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 71.08 சதவீதம் வாக்குப்பதிவானது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 27-ந் தேதி தேர்தல் நடந்தது. 2-வது கட்ட தேர்தல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர் ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1995 பதவிகளுக்கு நேற்று நடந்தது. இதில் 720 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 1,275 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 248 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 3 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கைகளும் என மொத்தம் 4 லட்சத்து 691 பேர் வாக்களிக்க வசதியாக, 994 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 176 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டன. 80 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மற்ற வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராவும், வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு மற்றும் அனைத்து விதமான பொருட்களும் நேற்று முன்தினம் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்று காலை 6 மணி அளவில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி திறந்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அந்த வாக்குப்பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன்களை தவிர மற்ற 3 யூனியன்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. 10 மணிக்கு பிறகு அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 100 மீட்டருக்கு அப்பால், வேட்பாளர்கள் நின்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இதனால் அனைத்து கிராமங்களும் பரபரப்பாக காணப்பட்டன. இந்த தேர்தல் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று காலை 9 மணி நிலவரப்படி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 2.72 சதவீதமும், கயத்தாரில் 17.21 சதவீதமும், ஓட்டப்பிடாரத்தில் 2.31 சதவீதமும், விளாத்திகுளத்தில் 12.06 சதவீதமும், புதூரில் 14.21 சதவீதமும் பதிவானது. சராசரியாக 8.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 14.59 சதவீதமும், கயத்தாரில் 34.38 சதவீதமும், ஓட்டப்பிடாரத்தில் 14.96 சதவீதமும், விளாத்திகுளத்தில் 22.35 சதவீதமும், புதூரில் 37.76 சதவீதமும் பதிவானது. சராசரியாக 22.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

மதியம் 1 மணி நிலவரப்படி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 37.96 சதவீதமும், கயத்தாரில் 52.33 சதவீதமும், ஓட்டப்பிடாரத்தில் 39.86 சதவீதமும், விளாத்திகுளத்தில் 43.46 சதவீதமும், புதூரில் 54.72 சதவீதமும் பதிவானது. சராசரியாக மொத்தம் 43.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாலை 3 மணி நிலவரப்படி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 50.43 சதவீதமும், கயத்தாரில் 62.16 சதவீதமும், ஓட்டப்பிடாரத்தில் 50.68 சதவீதமும், விளாத்திகுளத்தில் 60.44 சதவீதமும், புதூரில் 67.21 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. சராசரியாக மொத்தம் 56.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன்பிறகும் சில வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் 71.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 511 ஆண்கள், 1 லட்சத்து 49 ஆயிரத்து 840 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 353 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அந்தந்த யூனியனுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

2-ம் கட்ட தேர்தலையொட்டி போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 50 அதிவிரைவு படையினர், 16 ரோந்து படையும் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்

Next Story