அரியலூர் மாவட்ட 2-ம் கட்ட தேர்தலில் 82.49 சதவீத வாக்குப்பதிவு


அரியலூர் மாவட்ட 2-ம் கட்ட தேர்தலில் 82.49 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 82.49 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் மிக பதற்றமான 61 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு அரியலூர், திருமானூர், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி நடந்தது. இதில் 81.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்தநிலையில் 2-ம் கட்ட தேர்தல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேற்று நடந்தது. இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 110 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினருக்கு ஒருவரும் என மொத்தம் 114 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2,772 பேர் போட்டி

இதையடுத்து ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 பேரும், 55 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 226 பேரும், 95 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 368 பேரும், 700 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,146 பேரும் என மொத்தம் 856 பதவியிடங்களுக்கு 2,772 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இதற்காக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடிகளும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 158 வாக்குச்சாவடிகளும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 157 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

காலை முதலே வாக் காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். இதில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்கள் 1,30,935 பேரும், பெண் வாக்காளர்கள் 1,31,491 பேரும், மற்றவர்கள் 4 பேரும் என மொத்தம் 2,62,430 பேர் உள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆண்கள் 19,608 பேரும்,, பெண்கள் 18,433 பேரும் மொத்தம் 38,041 பேர் வாக்களித்திருந்தனர். இது 14.50 சதவீதமாகும். அதன்பிறகு காலை 11 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 32,773 பேரும், பெண் வாக்காளர்கள் 33,832 பேரும் என மொத்தம் 66,605 பேர்் வாக்களித்திருந்தனர். இது 25.38 சதவீதமாகும்.

5 மணி நிலவரப்படி

பகல் 1 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 53,434 பேரும், பெண் வாக்காளர்கள் 61,084 பேரும் என மொத்தம் 1,14,518 பேர் வாக்களித்திருந்தனர். இது 43.63 சதவீதமாகும். இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 76,377 பேரும், பெண் வாக்காளர்கள் 82,175 பேரும், மொத்தம் 1,58,552 பேர் வாக்களித்திருந்தனர். இது 60.41 சதவீதமாகும்.மாலை 5 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 1,02,991 பேரும், பெண் வாக்காளர்கள் 1,13,489 பேரும் மொத்தம் 2,16,480 பேர் வாக்களித்து இருந்தனர். இது 82.49 சதவீதமாகும்.

வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் ரத்னா, தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர். வாக்குச்சாவடி மையங்களின் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வாக்குச்சாவடி மையங்களின் முன்பு கூடி நின்ற பல்வேறு அரசியல் கட்சியினரை அப்புறப்படுத்தினர்.

வெப்கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்குப்பதிவு நடைபெற்ற 3 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 495 வாக்குச்சாவடிகளில் ஜெயங்கொண்டத்தில் 35 வாக்குச்சாவடிகள், தா.பழூரில் 14 வாக்குச்சாவடிகள், ஆண்டிமடத்தில் 12 வாக்குச்சாவடிகள் என 61 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை ஆகும். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது தவிர, பதற்றமான 61 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடி 61 வாக்குச்சாவடிகளையும் கண்காணித்து வந்தனர். வெப் கேமரா மூலம் பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ரத்னா, தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோல் 77 வாக்குச்சாவடிகள் வீடியோ கேமரா மூலமாகவும், 63 வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் 63 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story