இலுப்பூர் அருகே சின்னம் குளறுபடியால் மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது


இலுப்பூர் அருகே சின்னம் குளறுபடியால் மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:59 PM GMT)

இலுப்பூர் அருகே சின்னம் குளறுபடியால் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ந்தேதி 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிப்பட்டி, பேராம்பூர், பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சேகர் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பேனர் சின்னத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டில் ஸ்குரு சின்னம் இடம் பெற்றதால் அந்த பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த அவர் கோரிக்கை வைத்திருந்தார். அதை தொடர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் அதிகாரிகள், சேகருக்கு தவறுதலாக ஸ்குரு சின்னம் ஒதுக்கியது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து தகவல் அனுப்பி இருந்தார்.

6 சதவீதம் குறைவு

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் 15-வது வார்டுக்கு உட்பட்ட கோங்குடிப்பட்டி, பேராம்பூர், பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் 15-வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் 30-ந்தேதி இரண்டாம் கட்டமாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில் 73.73 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. கடந்த 27-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 79.69 வாக்கு பதிவானது. இதில் கடந்த வாக்குப்பதிவை விட 6 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story