ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல்: 8 ஒன்றியங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு கலெக்டர் நேரில் ஆய்வு


ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல்: 8 ஒன்றியங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிக்கான 2-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஊராட்சிக்குழு 14 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 63 பேரும், ஊராட்சி ஒன்றிய 144 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 627 பேரும், 244 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,103 பேரும், 1,691 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,803 பேரும் போட்டியிட்டனர்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 8 ஒன்றியங்களிலும் 1,337 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்கள் என ஆர்வமாக ஓட்டுப்போட நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக 102 வீடியோ கிராபர், 52 வெப்கேமரா, 58 நுண் பார்வையாளர்கள், நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர்.

ஒரே இடத்தில் 7 வாக்குச்சாவடிகள்

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பர்-1 டோல்கேட் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.. இங்குள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் 4,403 வாக்காளர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. எனவே, அங்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

7 வாக்குச்சாவடிகளை கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம், வாக்காளர்களை நல்ல முறையில் அணுகிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய 22-வது வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் பிச்சாண்டார் கோவில் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டனர். இதுபோல சாலக்காடு கிராமத்தில் உள்ள ராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.

மூதாட்டி ஆர்வம்

மேலூர்-அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தத்தம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி, கிராம பஞ்சாயத்து வார்டு எண் 4, 8 மற்றும் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த மரியாயி என்ற 80 வயது மூதாட்டி, தனது வலது கால் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் தனி ஆளாக வந்து வாக்களித்தார்.

இதுபோல ஆராயிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் சா.அய்யம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மூதாட்டி வனத்தாய்(வயது 95) தனது பேரன் உதவியுடன் வாக்களித்தார்.

முசிறி ஒன்றியம்

இதுபோல முசிறி ஒன்றியம் பெரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஆர்வமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். முசிறி ஊராட்சி ஒன்றியம் புலிவலத்தில் அமைந்துள்ள முசிறி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளிலும் பகல் 12.30 மணிக்கு ஆண்கள், பெண்கள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்களித்தனர். புலிவலம் பஞ்சாயத்து தலைவர் பதவி, கிராம பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கு சுமார் 2 ஆயிரம் வாக்காளர்கள் அமைதியாக வாக்களித்தனர்.

இதுபோல துறையூர் ஒன்றியம், தொட்டியம் ஒன்றியம், புள்ளம்பாடி ஒன்றியம், லால்குடி ஒன்றியம், தா.பேட்டை ஒன்றியம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

Next Story