ராமன்துறை வாக்குச்சாவடியில் பரபரப்பு: தனது வாக்கை வேறு ஒருவர் போட்டதால் பெண் போராட்டம்


ராமன்துறை வாக்குச்சாவடியில் பரபரப்பு: தனது வாக்கை வேறு ஒருவர் போட்டதால் பெண் போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ராமன்துறை வாக்குச்சாவடியில், தனது வாக்கை வெறொருவர் போட்டதாக கூறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ததால் சமரசமானார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. கிள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமன்துறை ஊராட்சியில் வாக்குச்சாவடியானது அங்குள்ள ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

இந்த நிலையில் மதியம் 3.30 மணி அளவில் கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராணி (வயது 46) என்பவர் ஓட்டு போடுவதற்காக சென்றார். ராமன்துறை 2-வது வார்டுக்கான வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குச்சீட்டுகளை கேட்டார். ஆனால் வாக்காளர் பட்டியலை பார்த்தபோது புஷ்பராணி என்ற பெயரில் ஏற்கனவே ஓட்டு போடப்பட்டு இருந்தது. இதனால் புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். தான் ஓட்டு போடவில்லை என்றும், எனவே மீண்டும் ஒரு முறை பட்டியலை சரிபார்க்கும்படியும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வாக்குச்சாவடியில் தர்ணா

இதனையடுத்து வாக்குச்சாவடி அதிகாரி தலைமையில் பணியாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் புஷ்பராணியின் ஓட்டை வேறு யாரோ போட்டது உறுதிப்படுத்தப்பட்டது. புஷ்பராணி என்ற பெயரில் நிறைய வாக்காளர்கள் இருந்ததால் தவறுதலாக ஓட்டு மாற்றிப் போடப்பட்டது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிைடயே புஷ்பராணி வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டிக்கு அருகே அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே வாக்குச்சாவடி முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் புஷ்பராணியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆய்வுக்குரிய வாக்காளர்

இதைத் தொடர்ந்து ஆய்வுக்குரிய வாக்காளர் பட்டியல் மூலம் புஷ்பராணி ஓட்டு போட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரையிலும் புஷ்பராணி வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரவில்லை. அதாவது மதியம் 3.30 மணியில் இருந்து 4 மணி வரை 30 நிமிடங்களாக வாக்குச்சாவடியிலேயே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் ஆய்வுக்குரிய வாக்காளர் பட்டியல் மூலமாக புஷ்பராணி ஓட்டு போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். புஷ்பராணி போட்ட ஓட்டானது ஆய்வுக்கு பிறகு செல்லத்தக்க ஓட்டா? அல்லது செல்லாத ஓட்டா? என்று முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story