கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முகவர்கள் நியமனம்


கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முகவர்கள் நியமனம்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நடந்த 5 ஒன்றியங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முகவர்கள் நியமனம் நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சார்பில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமனம் நேற்று நடந்தது. இதனால் 5 ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கூட்டமாக காணப்பட்டது.

முதல்கட்டமாக காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர், ஓசூர், தளி 5 ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 81.43 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குஎண்ணும் மையத்தில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை

இந்த நிலையில் வருகிற 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் 1,405 பதவிகளுக்கு 4,545 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நியமனம் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் நின்று கொண்டு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்காக வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு நேற்று முதல்கட்ட தேர்தல் நடந்த 5 ஒன்றியங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்தது.

முகவர்கள் கூட்டம்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு முகவர்கள் நியமனம் கிடையாது. வேட்பாளரே தங்களது வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் சார்பில் முகவர்கள் நியமித்துக்கொள்ளலாம்.

இதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டது. உரிய படிவங்களுடன், முகவர்களின் வாக்காளர்கள் அடையாள அட்டை, புகைப்படத்துடன் தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பம் செய்து அடையாள அட்டையை பெற்றனர். இதற்காக 5 ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story