2-ம் கட்ட தேர்தலை கலெக்டர் நேரில் ஆய்வு


2-ம் கட்ட தேர்தலை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:15 PM GMT (Updated: 30 Dec 2019 10:01 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

பரமக்குடி,

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட அரியனேந்தல் கிராமத்தில் சுந்தரம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தினை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்ேபாது அந்த மையத்தில் அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கண் பார்வை இழந்த ராமு (வயது 75). மற்றும் 95 வயது மூதாட்டி சேது அம்மாள் ஆகியோர் தங்களது மகன்களுடன் வந்து வாக்களித்தனர்.

அவர்களை கலெக்டர் கனிவுடன் வரவேற்று வாக்களிக்க செய்தார். மூதாட்டி சேது அம்மாள் தனது 4 வாக்குகளையும் நிதானமாக வாக்களித்து, 4 சீட்டுக்களையும் முறையாக மடித்து ஓட்டுப் பெட்டிக்குள் போட்டார். இதனை பார்த்த கலெக்டர் அவரை பாராட்டினார்.

தொடர்ந்து கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 6 ஒன்றியங்களில் 1,006 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

பார்வையற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் மூன்று சக்கர வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நயினார்கோவில் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு தொடங்காத சித்தனேந்தல், பந்தப்பனேந்தல், பெரியனேந்தல் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

வேந்தோணி, தெளிச்சாத்தநல்லூர், சத்திரக்குடி, காமன்கோட்டை உள்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்டநேரம் வரிசையிலும், வெயிலிலும், வாக்குச்சாவடி மையங்களின் முன்பு காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் தனது வாக்கை அவரது சொந்த ஊரான பேரையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பதிவு செய்தார்.

Next Story