மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 5 ஒன்றியங்களில் ஆர்வமாக ஓட்டு போட்ட வாக்காளர்கள்


மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 5 ஒன்றியங்களில் ஆர்வமாக ஓட்டு போட்ட வாக்காளர்கள்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நேற்று 5 ஒன்றியங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இதில் தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடந்தது. நேற்று 2-ம் கட்டமாக நேற்று கிரு‌‌ஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடந்தது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு குழு உறுப்பினருக்கான 11 பதவிகளுக்கு 73 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினருக்கான 109 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 107 பதவிகளுக்கு 540 பேரும் போட்டியிடுகிறார்கள்.

4,452 பேர் போட்டி

ஊராட்சி மன்ற தலைவருக்கான 163 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 160 பதவிகளுக்கு 634 பேர் போட்டியிடுகிறார்கள். ஊராட்சி வார்டு குழு உறுப்பினருக்கான 1,479 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 373 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் 1,106 பதவிகளுக்கு 3,205 பேர் போட்டியிடுகிறார்கள்.

5 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 1,762 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 378 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், மீதம் உள்ள 1,384 பதவிகளுக்கு 4,452 பேர் போட்டியிடுகிறார்கள். நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டு போட்டனர்.

கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்

கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சி சிப்பாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வாக்களித்தார். பர்கூர் ஒன்றியம் சிந்தகம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) ஆகியோர் வாக்களித்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) வாக்களித்தார். வேப்பனப்பள்ளி ஒன்றியம் தளவாய்ப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பி.முருகன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) வாக்களித்தார். வயதான முதியவர்கள், பெண்கள் என அனைவரும் வந்து வரிசையில் நின்று வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

பதிவான வாக்குகள் விவரம்

காலை 9 மணி நிலவரப்படி 5 ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் விவரம் சதவீதத்தில் வருமாறு:-

கெலமங்கலம் - 11.29

சூளகிரி - 12.51

வேப்பனப்பள்ளி - 11.37

கிரு‌‌ஷ்ணகிரி - 13.1

பர்கூர் - 8.4

காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்:-

கெலமங்கலம் - 12.31

சூளகிரி - 14.73

வேப்பனப்பள்ளி - 28.41

கிரு‌‌ஷ்ணகிரி - 21.16

பர்கூர் - 18.61

பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்:-

கெலமங்கலம் - 31.12

சூளகிரி - 51.53

வேப்பனப்பள்ளி - 47.39

கிரு‌‌ஷ்ணகிரி - 49.81

பர்கூர் - 50.81

மாலை 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்:-

கெலமங்கலம் - 65.03

சூளகிரி - 65.58

வேப்பனப்பள்ளி - 65.49

கிரு‌‌ஷ்ணகிரி - 65.77

பர்கூர் - 65.38

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் 5 மணிக்கு பின்னர் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. நீண்ட நேரம் வரையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Next Story