மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி ஆதித்ய தாக்கரே - கட்சியை போல ஆட்சியிலும் கை ஓங்குகிறது
மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார். கட்சியை போல ஆட்சியிலும் அவரது கை ஓங்குகிறது.
மும்பை,
சிவசேனா கூட்டணி அரசு நேற்று தனது மந்திரி சபையை விரிவாக்கம் செய்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனான, 29 வயது ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆதித்ய தாக்கரே புகழ்பெற்ற அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். மேலும் அவர் தான் தனது குடும்பத்தில் இருந்து தேர்தல் களத்தில் இறங்கிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் மறைந்த பால் தாக்கரே, அவரின் மகன் உத்தவ் தாக்கரே இருவரும் தேர்தல் களத்தில் இதுவரை இறங்கியதே இல்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.
மந்திரி பதவி ஏற்றுள்ள ஆதித்ய தாக்கரே பள்ளி படிப்பை பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்தார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்தார். இதை தொடர்ந்து கே.சி. சட்ட கல்லூரியில் தனது சட்ட மேற்படிப்பை படித்தார்.
தொடக்கம் முதலே அரசியலிலும், மக்கள் பிரச்சினையிலும் அதீத ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஆதித்ய தாக்கரே, குறிப்பாக இளைஞர்கள் பிரச்சினை யில் அதிக அக்கரை காட்டினார்.
2009-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்த அவர் பின்னர், அக்கட்சியின் இளைஞர் அணியான யுவசேனாவின் தலைவரானார். முந்தைய பாரதீய ஜனதா அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததற்கு அவர் முன்னெடுத்த பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களே அச்சாரமாக விளங்கின.
வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை இரவு முழுவதும் திறக்க அனுமதிப்பதன் மூலம் மும்பையின் இரவு வாழ்க்கையை புதுப்பிக்க முடியும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இவர் தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே கலை துறையிலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய முதல் கவிதை புத்தகத்தை 2007-ம் ஆண்டு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.
சட்டசபை தேர்தலில் அவர் மேற்கொண்ட தீவிர பிரசாரமும், பேரணிகளும் சிவசேனாவின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரித்தன. அதுமட்டும் இன்றி ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உத்தவ் தாக்கரே மந்திரி சபையில் இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார். மந்திரி பதவி ஏற்றதன் மூலம் கட்சியை போல ஆட்சியிலும் இவரது கை ஓங்குகிறது.
Related Tags :
Next Story