உள்ளாட்சி தேர்தலில் தகராறு: விவசாயியை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயன்ற 2 பேர் கைது


உள்ளாட்சி தேர்தலில் தகராறு: விவசாயியை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2020 3:45 AM IST (Updated: 1 Jan 2020 1:12 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகபாடியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாண்டகப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் ஒருவருக்கு அதே ஊரை சேர்ந்த விவசாயியான ராஜரத்தினம் என்பவர் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் ராஜரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தவுடன் ராஜரத்தினம், அவரது மனைவி ராஜகிளி மற்றும் அவரது 3 மகன்கள் ஆகியோர் தனது குடிசையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது அவரது குடிசை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடினர். குடிசை தீப்பற்றி எரிவதை அறிந்து குடிசையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிர் தப்பி வெளியேறினர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டில் பரவிய தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 பேர் கைது

விரைந்து வந்த போலீசார் குடிசையின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த சுப்பிரமணி(வயது 53), குமார்(35), ரவி(19) ஆகியோர் தேர்தலில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜரத்தினம் வீட்டின் மீது தீவைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குமார், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுப்பிரமணியை தேடிவருகின்றனர். தேர்தல் தகராறு காரணமாக ஒரு குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story