கள்ளக்குறிச்சியில் மரவள்ளி ஆலை அமைக்க வேண்டும், குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் மரவள்ளி ஆலை அமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) கருணாநிதி, கோட்டாட்சியர் சாய்வர்தினி, முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், வேளாண்மை துணை இயக்குனர் செல்வபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது குறைகள் குறித்து பேசியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், மரத்தொழிற்சாலை அமைக்க வேண்டும். சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்ந்த மரவள்ளி ஆலை அமைக்க வேண்டும்.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 700 வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும், கூட்டுறவு வங்கியில் கரும்பு பயிர் கடன் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்தை விலை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் விலைக்கு உளுந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யக்கூடிய விவசாயிகளுக்கு வங்கி மூலமாக பணம் வழங்கப்படாமல் உடனே ரொக்கமாக வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பேசுகையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story