உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் பகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உடுமலை,
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளின் வாக்குப்பெட்டிகள் உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசுகலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளின் வாக்குப்பெட்டிகள் உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளின் வாக்குப்பெட்டிகள் உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் வகுப்பறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தனி வழித்தடமும், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனி வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story