திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் காத்திருப்பு மையம் கலெக்டர் திறந்து வைத்தார்


திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் காத்திருப்பு மையம் கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 1 Jan 2020 4:15 AM IST (Updated: 1 Jan 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.9½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புறநோயாளிகள் காத்திருப்பு மையத்தை கலெக்டர் ‌ஷில்பா திறந்து வைத்தார்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் வந்து அமர்ந்து ஓய்வெடுக்க ஏதுவாக டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் ரூ.9½ லட்சம் செலவில் காத்திருப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘தமிழக அரசு சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதுடன் உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் புதிய கட்டிடங்கள் கட்டிக்கொடுத்து வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தும் பொதுமக்கள், ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்’’ என்றார்.

விழாவில் நாங்குநேரி தாசில்தார் ரகுமத்துல்லா, டி.வி.எஸ். நிறுவன மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி நிறைவு விழா

இதைத்தொடர்ந்து திருக்குறுங்குடியில் நடைபெற்ற தொழில் பயிற்சி நிறைவு விழாவில் கலெக்டர் ‌ஷில்பா கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல் தொழில் தொடங்கி பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர வேண்டும்’’ என்றார்.

விழாவில், மாவட்ட முன்னோடி வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன முகாம் சார்பில் கறவைமாடு பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு பயிற்சி, பனை ஓலையில் பொருட்கள் செய்தல், தையல் பயிற்சி என பல்வேறு பயிற்சி முடித்த 50 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெற்றிவேல், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ‌ஷியாமல் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story