குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு: பஞ்சாயத்து எழுத்தருக்கு 3 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு: பஞ்சாயத்து எழுத்தருக்கு 3 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 10:15 PM GMT (Updated: 31 Dec 2019 9:58 PM GMT)

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு செய்த பஞ்சாயத்து எழுத்தருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிதம்பராபுரம் பஞ்சாயத்து தலைவராக சூர்யநாராயணன் (வயது 72) என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தார். அப்போது பஞ்சாயத்து எழுத்தராக ராஜகண்ணன் (48) என்பவர் பதவி வகித்து வந்தார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு செய்துள்ளனர்.

அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர், 130 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். ஒரு குடிநீர் இணைப்புக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சூர்யநாராயணன், ராஜகண்ணன் ஆகியோர் சேர்ந்து 232 குடிநீர் இணைப்புகள் வழங்கி உள்ளனர். அதாவது அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக 102 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஒரு குடிநீர் இணைப்புக்கு ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு ஏற்படுத்தி உள்ளனர்.

242 ஆவணங்கள்

இதுகுறித்து லஞ்ச ஊழல் தடுப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அப்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் கடந்த 2008-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் 242 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

தற்போது இந்த வழக்கை ஊழல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரித்து வந்தார். சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சிறப்பு கோர்ட்டில் 242 ஆவணங்களை சமர்ப்பித்தார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பஞ்சாயத்து தலைவர் சூர்யநாராயணன் கடந்த 2013-ம் ஆண்டு விபத்தில் இறந்து விட்டார்.

3 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கை நீதிபதி பத்மா விசாரித்து வந்தார். மொத்தம் 105 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட ராஜகண்ணனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சீனிவாசன் ஆஜரானார்.


Next Story