பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகள் திறக்க முடிவு - கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் பேட்டி


பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகள் திறக்க முடிவு - கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2020 5:45 AM IST (Updated: 1 Jan 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகளுக்கு மானிய விலையில் மது வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பெங்களூருவில் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் கூறினார். கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பெங்களூரு நகரில் மதுபான கடைகள் நள்ளிரவு 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மாநில அரசின் வருமானத்தை பெருக்கும் வகையில் பெங்களூரு நகரில் தினமும் நள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் துறையும் அனுமதி வழங்கியுள்ளது. சட்டம்ஒழுங்கை பாதுகாக்கும் பணியை போலீசார் மேற்கொள்வார்கள்.

நடப்பு ஆண்டில் கலால் வரி வசூல் இலக்காக ரூ.20 ஆயிரத்து 950 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.16 ஆயிரத்து 100 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் உள்ள 3 மாதங்களில் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழைகளுக்கு மானிய விலையில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

ஏழை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானத்தை மட்டும் மானிய விலையில் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அவர்களின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தரமான மதுபானம் விற்பனை செய்யப்படும்.

கூலித்தொழிலாளர்கள் குறைந்த விலை மதுபானத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் மரணம் அடையும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இவ்வாறு மந்திரி எச்.நாகேஷ் கூறினார்.

Next Story