நெல்லிக்குப்பத்தில், தொழிலாளி அரிவாளால் வெட்டி படுகொலை
நெல்லிக்குப்பத்தில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), கூலி தொழிலாளி. இவருக்கு சவுமியா என்கிற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்களுக்கும், அருகில் உள்ள மேல்பாதி காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை வரவேற்று இரு பகுதியை சேர்ந்த இளைஞர்களும் பட்டாசுவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் பாட்டு பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின் போது அம்பேத்கர்நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த தகவவின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து தப்பிஓடினர். அதனை தொடர்ந்து போலீசாரும் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் சிறிதுநேரம் கழித்து வேல்முருகன் அந்த பகுதிக்கு வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை வெட்டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் அங்குள்ள முள்புதரில் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இதை உறுதிப்படுத்தி கொண்ட அந்த கும்பல் அதன் பிறகு அங்கிருந்து தப்பிச்சென்றது. வேல்முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த சவுமியா மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வேல்முருகன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வேல்முருகனை கொலை செய்தது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story