கூடலூரில் பரிதாபம்: நடுரோட்டில் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி - நண்பர்கள் 5 பேர் படுகாயம்


கூடலூரில் பரிதாபம்: நடுரோட்டில் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி - நண்பர்கள் 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Jan 2020 10:15 PM GMT (Updated: 1 Jan 2020 3:56 PM GMT)

கூடலூரில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூடலூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் கோபு. இவரது மகன் கீர்த்திவாசன்(வயது 18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கீர்த்திவாசன் நேற்று முன்தினம் தனது நண்பர்களான விஜய்(20), அக்னிதேவன்(18), பரத்(19), ஹரிஹரன்(19), சத்யதரன்(19) ஆகிய 5 பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். காரை புதுச்சேரியை சேர்ந்த டிரைவரான ராமானுஜம்(37) என்பவர் ஓட்டினார். அவர்கள் ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, இரவு 8 மணிக்கு கூடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் காரின் மேற்புறம் இருந்த சிறிய கதவை திறந்து தலையை வெளியே நீட்டியவாறு கீர்த்திவாசன் நின்று கொண்டு இருந்தார்.

கூடலூர் சில்வர்கிளவுட் பகுதியில் 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. தொடர்ந்து தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கீர்த்திவாசன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காருக்குள் அமர்ந்து இருந்த அவரின் நண்பர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ராமானுஜம் காயமின்றி தப்பி, தலைமறைவாகி விட்டார். விபத்து காரணமாக கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசுக்கு வாகன ஓட்டிகள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த கீர்த்திவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்த காரை போலீசார் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story