கோவை அரசு ஆஸ்பத்திரியில்: சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை அபேஸ் - கில்லாடி வாலிபர் கைது
கோவை அரசு ஆஸ்பத்திரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கில்லாடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை பீளமேடு பி.ஆர்.புரம் காந்தி வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 72). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பழனியம்மாளை அவருடைய மகன் மோகன சுந்தரம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அவசர வேலை காரணமாக மோகன சுந்தரம் தனது தாயை அரசு ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு வெளியே சென்றார்.
பழனியம்மாள் ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழனியம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்தார். உங்களை போன்ற மூதாட்டிகளுக்கு சிகிச்சை செலவுக்கு அரசு பணம் வழங்குகிறது. அதனை நான் வாங்கி தருகிறேன் என பழனியம்மாளிடம் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறினார். அரசு பணம் வழங்கும் என்ற நம்பிக்கையில் பழனியம்மாளும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.
பின்னர் அந்த வாலிபர், ‘அரசு அதிகாரியை பார்க்க செல்ல வேண்டும். நீங்கள் நகை அணிந்து உள்ளீர்கள். இப்படி சென்றால் சிகிச்சைக்கு பணம் தர மாட்டார்கள். நகையை கழற்றி கொடுங்கள்’ என்றார். அதன் படி பழனியம்மாள் தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட 7½ பவுன் நகையையும், செல்போன், 200 ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர், ‘அதிகாரியை பார்த்து விட்டு வருகிறேன். நீங்கள் இங்கே இருங்கள்’ என கூறி விட்டு அந்த வாலிபர் நகையுடன் மாயமாகி விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனியம்மாள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மோசடி செய்த வாலிபரின் உருவப்படம் பதிவாகி இருந்தது.
போலீசின் தீவிர விசாரணையில், மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்து சென்றது கோவை சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கில்லாடி வாலிபர் கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் கிருஷ்ணகுமார் அடைக்கப்பட்டார்.இவர் முன்பு காய்கறி வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடிக்கு கிருஷ்ணகுமாருக்கு உடந்தையாக ஒரு பெண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story