கோயம்பேடு மார்க்கெட்டில் இரும்பு குழாய்களுக்கு இடையே 4 பேரின் கால்கள் சிக்கியதால் பரபரப்பு
கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு குழாய்களுக்கு இடையே 4 பேரின் கால்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் ஆடு, மாடுகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக தரையில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 30-ந்தேதி நுழைவு எண்-18 வழியாக நடந்து சென்ற வியாபாரி முருகன் என்பவரின் கால்கள், நடைபாதையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு குழாய்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் இரும்பு குழாயை வெட்டி எடுத்து அவரை மீட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நுழைவு எண் 18-ல் தரையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு குழாய்கள் தண்ணீரில் மூழ்கியது.
அப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மூன்று சக்கர சைக்கிளில் கொத்தமல்லி மூட்டையை ஏற்றி வந்த கிருஷ்ணன்(42), காய்கறி வாங்க வந்த அருண்(38), கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி(40) ஆகியோர் இரும்பு குழாயில் நடக்கும்போது நிலைதடுமாறி விழுந்ததில் அவர்களின் கால்கள், இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கியதால் வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.
இவர்களுக்கு உதவி செய்ய சென்ற சிவா என்பவரின் காலும் அதில் சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு தேங்கி இருந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி, சிவா ஆகியோரை மீட்டனர்.
ஆனால் கிருஷ்ணன், அருணின் ஆகியோரின் கால்கள் முட்டு வரை மாட்டிக்கொண்டதால், வெல்டிங் எந்திரம் மூலம் இரும்பு குழாய்களை வெட்டி எடுத்து இருவரையும் மீட்டனர். இவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் காலும் இதில் சிக்கியது. ஆனால் சாதுரியமாக செயல்பட்ட அவர், காலை உடனடியாக வெளியே எடுத்துவிட்டார்.
தொடர்ந்து இதுபோல் பொதுமக்களின் கால்கள் சிக்குவதால் இரும்பு குழாய்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் சிறிய அளவிலான இரும்பு குழாய்களை பதிக்கும் பணி நடைபெறுவதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 பேரின் கால்கள் இரும்பு குழாய்களுக்கு நடுவில் சிக்கிய சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story