மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்


மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:15 AM IST (Updated: 3 Jan 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண, வண்ண நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர்,

தமிழர்களின் தை திருநாளான பொங்கல் பண்டிகை என்றுமே தனி சிறப்புக்குரியது. பொங்கல் பண்டிகையில் உழவுக்கு உறுதுணையான கால்நடைகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. உழவன் வீட்டில் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி நெட்டி உள்பட மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால் கால போக்கில் உழவுக்கு மாடுகளை பயன்படுத்திய காலம் மாறி அனைத்து பணிகளும் எந்திரமயமானது. இதனால் பல வீடுகளில் மாட்டு கொட்டகைகள் மறைந்து போய் டிராக்டர் கூடாரமாக மாறி போனது. இன்னும் பல இடங்களில் கால்நடைகளை கொண்டு உழவு பணிகள் முதல் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் பசு மாடுகள் நமது வீட்டின் லட்சுமியாக கருதி வணங்கி வழிபட்டு வளர்க்கப்படுகிறது.

நெட்டி மாலை தயாரிப்பு

இந்தநிலையில் மாட்டு பொங்கலின் முக்கிய இடத்தை நெட்டி மாலைகள் இடம் பிடித்து வந்தன. வண்ண, வண்ண நெட்டி மாலைகளை தயாரிப்பதற்கு திருவாரூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் பரம்பரையாக நெட்டி மாலை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெட்டி மாலைகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நெட்டி மாலை தயாரிப்பதை பரம்பரை தொழிலாக செய்து வருகிறோம். இதற்கான பணிகளை ஐப்பசி மாதம் தொடங்கி விடுவோம். நெட்டி என்ற தாவரத்தின் தண்டுகளை அறுத்து வந்து அதனை பக்குவமாக காய வைப்போம். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி பல வண்ண சாயத்தில் நனைத்து கலர், கலரான நெட்டிகளை உருவாக்கி வருகிறோம்.

சமுதாய கூடம்

இதற்கான பணிகளை 3 மாதத்தில் முடித்து விடுவோம். இந்த மாலைகளை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதில் காசுமாலை, ரெட்டமாலை, ஒத்தமாலை என பல வகைகள் உண்டு. இதனால் நெட்டி மாலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். நெட்டி மாலை உற்பத்திக்கு உரிய இடவசதி இல்லாமல் கூரை வீட்டில் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும். நெட்டி மாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவிகள் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story