சின்னமனூர் ஒன்றிய 8-வது வார்டுக்கு வாக்கு எண்ணுவதை நிறுத்தக்கோரி பா.ஜ.க.வினர் வாக்குவாதம்


சின்னமனூர் ஒன்றிய 8-வது வார்டுக்கு வாக்கு எண்ணுவதை நிறுத்தக்கோரி பா.ஜ.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:15 AM IST (Updated: 3 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் ஒன்றிய 8-வது வார்டு வாக்கு எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சின்னமனூர், 

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் கவுன்சிலருக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சின்னமனூரில் கிரு‌‌ஷ்ண அய்யர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. நேற்று மாலை 8-வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் அறைக்கு வேட்பாளர்களும், முகவர்களும் செல்வதற்கு முன்பே வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணும் பணியை நிறுத்தக்கோரி தேர்தல் அலுவலர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே அந்த அறையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். அதில் கட்சியினர் வருவதற்கு முன்பே 8-வது வார்டு வாக்குப்பெட்டி திறக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணியை நிறுத்தக்கோரி பா.ஜ.க.வினர் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்தனர். உடனே வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே வாக்கு எண்ணும் பணி நிறுத்தியதாலும், தங்களுக்கு உணவு சரியான முறையில் வழங்கவில்லையென்று கூறி அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க.வினருடன் தேர்தல் அலுவலர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து மையத்தில் இருந்து வெளியேறினர்.

வாக்கு எண்ணும் மையத்தில் வெளிநடப்பு செய்த ஆசிரியர்களுடன், சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

அதன் பின்னர் இரவு அலுவலர்களுக்கு உணவு வழங்கவில்லை. இதனால் அவர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடமாட்டோம் என்று மீண்டும் வெளிநடப்பு செய்தனர். இதனால் சின்னமனூரில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 2½ மணி நேரத்திற்கு பின்பு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story