மராட்டிய போலீசுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


மராட்டிய போலீசுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2020 5:00 AM IST (Updated: 3 Jan 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய போலீசுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

மும்பை அந்தேரி மரோலில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நேற்று மராட்டிய போலீஸ் எழுச்சி நாள் அணிவகுப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். அப்போது, மக்களின் பாதுகாப்பில் போலீசாரின் பங்களிப்பை பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் முன்னோக்கி நகர்கிறது. போலீஸ் படைக்கு பெரிய சவால்கள் உள்ளன.

நமது போலீஸ் படை எதிரிகளை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும். அவர்களை எதிர்கொள்வதற்கு போலீசாருக்கு சிறப்பான பயிற்சி, அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும். போலீசாருக்கு தரமான வாழ்க்கை தரம் ஏற்படுத்தி தரப்படும். இதற்காக மராட்டிய அரசு உறுதி பூண்டு உள்ளது.

காவல்துறைக்கு தேவைப்படும் முக்கியமான விஷயம் தைரியம். அதை மராட்டிய போலீஸ் படை முழுமையாக பெற்று இருக்கிறது என்பதை என்னால் பெருமையுடன் சொல்ல முடியும். கடமையில் இருக்கும் போலீஸ்காரர் தனக்கு என்ன அழுத்தம், வேலைப்பளு இருந்தாலும் அதை மறந்து விடுகிறார். அனைவரின் பாதுகாப்பிற்காக சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

போலீசாருக்கு நல்ல தரமான வீடுகள் மற்றும் தேவையான பிற வசதிகளை வழங்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் மரோலில் போலீசாருக்கு வீடுகள் வழங்கும் திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில போலீஸ் டி.ஜி.பி. சுபோத்குமார் ஜெய்ஸ்வால், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே உள்ளிட்ட முக்கிய போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story