தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - உதவி ஆணையர் தகவல்


தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - உதவி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2020 3:45 AM IST (Updated: 4 Jan 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் முகம்மது அப்துல்காதர் சுபைர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-

தூத்துக்குடி, 

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்க தொகை வழங்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்புகளுக்கு பட்டய படிப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், மேல்நிலைக்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்கள் பிடிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பிற்கு ரூ.2 ஆயிரமும், 12-ம் வகுப் பிற்கு ரூ.3 ஆயிரமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேல்நிலை கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை படிப்பவர்களுக்கு புத்தகம் வாங்க உதவி தொகையாக ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், அஞ்சல்பெட்டி எண்.718, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story