பரங்கிப்பேட்டை, பெண்ணாடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை, பெண்ணாடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரமேஷ்பாபு, வேல்முருகன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சையது அலி, சமூக ஆர்வலர் அருள்முருகன், கமுகவுஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பெண்ணாடம் நகர அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் பாஷா தலைமை தாங்கினார். இதில் நாசர், சிராஜ், ஷேக் சாக்கியர் மற்றும் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினர். முன்னதாக முஸ்லிம்கள், கையில் தேசிய கொடியை ஏந்தியபடி ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் வந்தனர்.
விருத்தாசலம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய ஐக்கிய பேரவை சார்பில் நவாப் ஜாமிஆ பள்ளி வாசல் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்களில் துணியை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நவாப் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் நகர செயலாளர் காதர் ஷெரீப், அன்சர் அலி, ஷாகுல் ஹமீது, முபாரக் அலி, அன்வர்தீன், ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றது.
Related Tags :
Next Story