மாவட்டத்தில் 1,163 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


மாவட்டத்தில் 1,163 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 8:06 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 1,163 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. சேலத்தில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 1,163 மையங்களில் உள்ள 3,276 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தங்களது பெற்றோருடன் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மேலும், வாக்காளர்களில் சிலர் முகவரி மாற்றம், திருத்தம், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் இருந்த ஊழியர்களிடம் வழங்கினர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில், சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணக்காடு காமராஜர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் உள்ளதா? அரசியல் கட்சியினர் மொத்தமாக வாக்காளர்களை சேர்க்க விண்ணப்பங்களை கொண்டு வந்தால் அவற்றை சேர்க்க கூடாது? என்பது குறித்து வாக்குச்சாவடியில் இருந்த ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,163 மையங்களில் உள்ள 3,276 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம்கள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதுதவிர, வருகிற 11 மற்றும் 12-ந் தேதி ஆகிய 2 நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இணையதளம்

இந்த முகாமில் புதிய வாக்காளர் பெயர் சேர்க்கவும், தொகுதி மாறி இடம் பெயர்ந்த வாக்காளர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். பெயர் நீக்கம் செய்தல், இருமுறை வாக்காளர்களாக பதிவாகியுள்ளவர் பெயர் நீக்கம் செய்திடவும், தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடமாறுதல் செய்தவர்களும் தங்களது பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7-ம், பெயர், முகவரி, பாலினம், வயது திருத்தம், புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளை அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து நேரில் வழங்கலாம்.

மேலும், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாமில் தங்களது பெயரினை வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல்

எனவே, வாக்காளர்கள் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு உள்ளிட்டவைக்கான விண்ணப்பப் படிவங்களை இச்சிறப்பு முகாமில் வழங்கலாம். இவ்வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் வருகிற 22-ந் தேதி வரை பெறப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சேலம் டவுன் தாசில்தார் மாதேஸ்வரன், மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் திலகம் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story