கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 வாலிபர்களும் குற்றவாளிகள் - கோர்ட்டு உத்தரவு


கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 வாலிபர்களும் குற்றவாளிகள் - கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:08 PM GMT (Updated: 4 Jan 2020 10:08 PM GMT)

கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 வாலிபர்களும் குற்றவாளிகள் என கூறிய சிக்கமகளூரு கோர்ட்டு நீதிபதி, அவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 9-ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா கெரேகட்டே கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் சிருங்கேரியில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி அந்த மாணவி கல்லூரிக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு வந்தார். அவர் தோட்டம் வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), பிரதீப் (27) ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவியை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் கல்லூரி மாணவியை வாயை பொத்தி மறைவான பகுதிக்கு தூக்கி சென்று அங்கு வைத்து மாறி, மாறி கற்பழித்துள்ளனர். இதையடுத்து மாணவியை உயிருடன் விட்டால் தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என பயந்த 2 பேரும், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவருடைய உடலை அதேப் பகுதியில் உள்ள 50 அடி கிணற்றில் தூக்்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோா், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு ெசன்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவியின் தோழிகளிடமும் விசாரித்தனர். அவர்களும் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் சிருங்கேரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து அதாவது, 19-ந்தேதி அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். அப்போது யாரோ மர்மநபர்கள் மாணவியை கற்பழித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிருங்கேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், பிரதீப் ஆகியோரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர்கள் 2 பேரும் சேர்ந்து கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த மாணவியை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கற்பழிப்பு, கொலை, தடயத்தை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் சிக்கமகளூரு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சிருங்கேரி போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்து சிக்கமகளூரு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், சந்தோஷ், பிரதீப் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி பசவராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பசவராஜ், போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில் சந்தோஷ், பிரதீப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்த நீதிபதி, அவர்களின் தண்டனை விவரங்கள் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 2 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story