பா.ஜனதாவினர் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டிக்கிறேன் முனிசாமி எம்.பி. பேட்டி


பா.ஜனதாவினர் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டிக்கிறேன் முனிசாமி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 10:21 PM GMT)

பா.ஜனதாவினர் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டிக்கிறேன் என்று முனிசாமி எம்.பி. கூறினார்.

கோலார் தங்கவயல்,

கோலாரில் நேற்று பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரின் தடையை மீறி முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோலார் டவுன் மணிக்கூண்டு பகுதிக்கு போராட்டக்காரர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச்சூடும் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மந்திரிகள் அசோக், நாகேஷ், முனிசாமி எம்.பி., நாராயணசாமி எம்.எல்.சி., முன்னாள் எம்.எல்.ஏ. சம்பங்கி ஆகியோர் சமாதானப்படுத்தினர். அதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து முனிசாமி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது துரதிர்ஷ்டவசமானது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை நான் கண்டிக்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பரிந்துரை செய்வேன். அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

போலீசார் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஆனால் எங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த எதிர்க்கட்சியினர் ரெயில் நிலையம் அருகில் ஒரு சரக்கு ஆட்டோவில் கற்களை நிரப்பி வைத்துக் கொண்டு தயாராக உள்ளனர். அது தொடர்பான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் அவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மந்திரிகள் அசோக், நாகேஷ், நாராயணசாமி எம்.எல்.சி. ஆகியோரும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனவும் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

Next Story