இருதரப்பு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார்: பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு


இருதரப்பு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார்: பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:57 PM GMT (Updated: 2020-01-05T05:27:22+05:30)

இருதரப்பு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்பட்ட புகாரில் பல்லாரி பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக பல்லாரி நகர சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சோமசேகர் ரெட்டி. பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் மந்திரியும், பிரபல அரசியல்வாதியாக இருந்தவருமான ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியினர் மற்றும் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் சார்பில் பல்லாரியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சோமசேகர் ரெட்டி பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். 17 சதவீதம் தான் முஸ்லிம்கள் உள்ள நிலையில் அவர்கள் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க கூடாது. நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராடினால் நடப்பது என்ன? என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் வாழ வேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம் மக்கள் இ்ந்திய கலாசாரங்களை தத்தெடுத்து பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று கூறியிருந்தார்.

சோமசேகர் ரெட்டியின் இந்த பேச்சு கர்நாடகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சோம சேகர் ரெட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை கண்டித்த நேற்று முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்லாரியில் போராட்டம் நடத்தினர். இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.

போராட்டக்காரர்கள், சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ.வின் உருவபொம்மைகளை தீவைத்து எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். மேலும் அவர்கள் சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதற்கிைடயே, இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. மீது பல்லாரி டவுனில் உள்ள காந்திநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோமசேகர் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த விவரங்கள் அடங்கிய நகலை போலீஸ் சூப்பிரண்டு போராட்டக்காரர்களிடம் காண்பித்து கலைந்து செல்லும்படி கூறினார். அதன்பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் நேற்று புகார் மனு கொடுத்தனர்.

அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் தினேஷ் குண்டுராவ், ஈஸ்வர் கன்ட்ரே, ஜமீர் அகமது கான் உள்பட ஏராளமான தலைவர்கள் நேற்று பெங்களூரு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தனர். அப்போது அவர்கள் நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சலீமிடம் புகார் மனு கொடுத்து சென்றனர்.

Next Story