ஊரப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


ஊரப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jan 2020 3:45 AM IST (Updated: 5 Jan 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் அறிஞர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபாண்டி (வயது 21). இவர் நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டல் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மொபட்டில் வந்த 2 பேர் வீராவை வழிமறித்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஓட்டல் அருகே மறைந்து கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து ஓடிவந்து வீராவை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிய வீராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனை பற்றி தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரா மீது கூடுவாஞ்சேரி, ஓட்டேரி போலீஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த ஓட்டல் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story