அறுவடை எந்திரத்தின் வாடகையை ஒரே கட்டணமாக நிர்ணயிக்க முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


அறுவடை எந்திரத்தின் வாடகையை ஒரே கட்டணமாக நிர்ணயிக்க முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 5 Jan 2020 7:41 PM GMT)

அறுவடை எந்திரத்தின் வாடகையை ஒரே கட்டணமாக நிர்ணயிக்க முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரடாச்சேரி,

நெல் சாகுபடிக்கு இயற்கையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மிதமான மழை மற்றும் தட்பவெட்பம், பாசனத்திற்கு ஏற்றவகையில் தண்ணீர் என அனைத்தும் நன்றாக அமைய வேண்டும். அந்தவகையில் இந்த ஆண்டு சாகுபடிக்கு ஏற்ற நிலை உள்ளதால் சம்பா சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாக திருவாரூர் மாவட்டத்தில் 1.35 லட்சம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறும்.

இந்த ஆண்டு தட்பவெப்பநிலை நன்றாக இருந்ததால் சாகுபடி பரப்பு 1.45 லட்சம் எக்டேர் என விரிவடைந்துள்ளது. இந்தநிலையில் உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல், விளைந்து முற்றிய நேரத்தில் பெய்த மழை ஆகிய இடர்பாடுகளையும் தாண்டி விவசாயிகள் நன்றாகவே பயிர் செய்துள்ளனர்.

அறுவடை எந்திரங்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தற்போது இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஏற்கனவே பலமுறை விவசாயத்தில் ஏற்பட்ட ந‌‌ஷ்டம் காரணமாக வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர்.

இதனால் அறுவடைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை எந்திரங்களையே முற்றிலுமாக நம்பி உள்ளனர். அறுவடை தொடங்கி 20 நாட்களுக்குள் இந்த பணி முடிக்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் பல அறுவடை எந்திரங்கள் தேவைப்படும்.

வெளி மாநிலங்கள்

அப்போது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வாடகை எந்திரங்கள் கொண்டு வரப்படும். ஆனால் தேவை அதிகமாக உள்ளதால் அறுவடை எந்திரங்களின் வாடகையும் அதிகரிக்கப்படும். விவசாயிகளின் தேவையினை கருத்தில் கொண்டு தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. இங்கு மிகக்குறைவான எந்திரங்களே உள்ளன.

முத்தரப்பு கூட்டத்தை...

இந்த எந்திரங்களுக்கு 1 மணி நேரத்திற்கு டயர்டைப் எந்திரம் ரூ.875-க்கும், டிராக்டர் டைப் எந்திரம் ரூ.1,415-க்கும் வாடகை கட்டணம் பெறப்படும். இந்த ஆண்டு கட்டணம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு முழுவதும் ஒரே நிலையாக இருக்காது. தேவைக்கேற்ப அவ்வப்போது அதிகரிக்கும்.

எனவே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் வகையில் அறுவடை எந்திரத்தின் வாடகையை ஒரே கட்டணமாக நிர்ணயம் செய்ய விவசாயிகள், எந்திர உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரை கொண்ட முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story