பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-06T01:38:52+05:30)

பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.

பாடாலூர்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, சீதேவிமங்கலம் அருகே உள்ள மணியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார்(45). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செட்டிகுளம் பிரிவு சாலையின் வளைவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே வந்த கார், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வேல்முருகனும், குமாரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரி நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த வேல்முருகன், குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கார் டிரைவரான சென்னை வடபழனியை சேர்ந்த சாந்தராஜ்(30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான குமாரின் மனைவி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story