வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி,
கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன்(வயது54). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த அய்யாக்கண்ணு (67) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கங்காதரன் கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் கச்சிராயப்பாளையம் போலீஸ் பாதுகாப்புடன் அய்யாக்கண்ணு வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதையடுத்து பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்கு தடை ஆணை வழங்கக்கோரியும், அய்யாக்கண்ணு உள்பட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைக்காக ஆஜராகுமாறு கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளிக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும் இன்ஸ்பெக்டர் வள்ளி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர் வள்ளிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதி ரெஹானாபேகம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story