குத்துச்சண்டை பயிற்சி பெற சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை


குத்துச்சண்டை பயிற்சி பெற சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-06T02:15:22+05:30)

குத்துச்சண்டை பயிற்சி பெற சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சிபு (வயது 21). இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் கோவைப்புதூர், ராமநாதபுரத்தில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராகவும் உள்ளார்.

அந்த பயிற்சி மையத்துக்கு 16 வயதான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் குத்துச்சண்டை பயிற்சி பெற வந்தார். இதனால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிபு, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். மேலும் அவர், அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து அவர், அந்த புகைப்படத்தை காட்டி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிபு அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபுவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story