நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

நடைபெற உள்ள நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்,
திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். கூட்டுறவு இணைபதிவாளர் மதி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பேசியதாவது:-
கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.
அதே போல் இந்த ஆண்டும் தகுதி உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதற்காக கூட்டுறவு துறை அலுவலர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். திருமங்கலத்தில் உள்ள 14 ஆயிரத்து 500 ரேஷன் கார்டுகளுக்கும் ரொக்கம் ரூ. 1 கோடி 50லட்சம் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் வேறுபாடு இன்றி கொண்டாடுகிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழக அரசு சட்டம்- ஒழுங்கு நிர்வாகம், நலதிட்டங்கள் வழங்குவதில் முதலிடமாக திகழ்கிறது.
இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் தமிழக அரசு நல்லாட்சி நடத்தும் மாநிலமாக உள்ளது. சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதே போல் அடுத்து வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் தனலெட்சுமி, மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட வக்கீல்பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், திருமங்கலம் நகரகழக செயலாளர் விஜயன், ஒன்றியகழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், திருமங்கலம் ஒன்றிய முன்னாள் தலைவர் தமிழழகன் கட்சி நிர்வாகிகள், ஆண்டிச்சாமி, சாமிநாதன், ஜாஹாங்கீர், சதீஸ்சண்முகம், சிவா, சிவன்காளை, உச்சப்பட்டி செல்வம், வட்டார வழங்கல் அதிகாரி நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story