வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:00 PM GMT (Updated: 2020-01-06T22:33:46+05:30)

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம், 

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சேலம் டவுன் பட்டைக்கோவில் என்று அழைக்கப்படும் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பட்டைக்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் உற்சவரான பிரசன்ன வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்தும், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்தும், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவருக்கும், தாயாருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரமனூர், செவ்வாய்பேட்டை

சேலம் பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆண்டாள், ஆஞ்சநேயர் மற்றும் பெருமாளுக்கு பால், பன்னீர், மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்து சாமிக்கு திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து ஆராதனையும் நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் விநாயகர், பெருமாள், தாயார் மற்றும் ஆஞ்சநேயர் சாமிகளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் சாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள், அலமேலு மங்கை தாயாருடன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

சேலம் சின்னதிருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவருக்கு வைரமுடி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல், சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது.

நங்கவள்ளி

நங்கவள்ளியில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி லட்சுமி நரசிம்ம சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் லட்சுமி நரசிம்ம சாமி சொர்க்கவாசலுக்கு எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர்.

இதேபோல மேச்சேரி கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். இதேபோல மேச்சேரி அமரத்தானூரில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், சோரகைமலை பெருமாள் கோவில், வனவாசி மலையில் அமைந்துள்ள பெருமாள் கோவில், ஜலகண்டாபுரம் சஞ்சீவிராய பெருமாள், எல்லைபெருமாள் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

எறகுண்டப்பட்டி

மேச்சேரி அருகே எறகுண்டப்பட்டி என்ற இடத்தில் இ‌‌ஷ்டசித்தி விநாயகர், சந்திரசேகர சாமி, வி‌‌ஷ்ணு துர்கை, ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி கணபதி ஹோமம், சுதர்சன ஹோமமும், நேற்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சன அபிஷேகம் பூஜை, ஆராதனை நடந்தது. அதிகாலை 5 மணியளவில் பூலோக வைகுண்ட நாதனின் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று ஸ்ரீரங்கநாதர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் சொர்க்கவாசலில் எழுந்தருளி திருச்சேவை அளித்தார்.

தொடர்ந்து லட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு நுழைவுவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. மேச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

Next Story