கன்னியாகுமரி-சென்னை வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி சைக்கிள் பயணம்


கன்னியாகுமரி-சென்னை வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 7 Jan 2020 4:00 AM IST (Updated: 6 Jan 2020 10:53 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் திருநகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாமியின் மகன் மணிகண்டன் (வயது 36). இவர் தனது 15 வயதில் விபத்தில் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில், எம்.காம்., பி.எட். உள்ளிட்ட பட்டங்களை பெற்ற இவர் மழைநீர் சேகரிப்பு, காற்றுமாசு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

தற்போது 3-வது முறையாக விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ள மணிகண்டன் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வருகிறார். இதற்காக இவர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் 13-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் வழியாக தனது சமூக விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்ட மணிகண்டன் கடந்த 1-ந் தேதி சென்னை உழைப்பாளர் சிலைமுன்பு பயணத்தை நிறைவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயணத்தை முடித்துக்கொண்டு ராமநாதபுரம் வந்த மணிகண்டனை உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது மணிகண்டன் கூறியதாவது:- எனது இந்த சமூகவிழிப்புணர்வு பயணம் 3-வது முறையாகும்.

தற்போது டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னையில் காற்று மாசு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அது தொடர்பான விழிப்புணர்வை வழிநெடுக மக்களிடம் ஏற்படுத்தினேன். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி மக்களிடம் எடுத்து கூறினேன். செல்பி மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. தற்போது நான் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட போது பலரும் என்னுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மக்களிடம் தற்போது சமூக சிந்தனை அதிகரித்து வருகிறது. எனது விழிப்புணர்வு பயணத்தை நடிகர் விவேக் நிறைவு செய்து பாராட்டி கவுரவித்தார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், மற்றும் மக்கள் மய்யம் தலைவர் நடிகர் கமல் ஆகியோர் பாராட்டியதை பெருமையாக கருதுகிறேன். எனது இந்த விழிப்புணர்வு பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story