வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்


வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-07T01:18:28+05:30)

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

சென்னை,

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது. இதற்காக நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விசுவரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் கோவில் வளாகத்தில் அலைமோத தொடங்கியது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அந்த நேரத்தில் மளமளவென பெய்த மழையையும் அவர்கள் பொருட்படுத்தாமல் பெருமாளை தரிசனம் செய்வதிலே கவனம் செலுத்தினர். சில பக்தர்கள் தங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த குடையை பயன்படுத்தி, நனையாமல் தங்களை தற்காத்துக்கொண்டனர்.

அதிகாலை 2.20 மணிக்கு ரூ.500, ரூ.200 கட்டண டிக்கெட் வைத்திருப்பவர்களும், சிறப்பு பாஸ் வைத்திருந்தவர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொது வரிசையில் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார். அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். இந்த காட்சியை காணவே காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று விண் அதிர பக்தி முழக்கம் எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் காலை 8 முதல் 10 மணி வரையிலும், முதியோர்கள் காலை 10 முதல் 11 மணி வரையும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் தெற்கு மாட வீதி வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று பகல் 2 மணியளவில் பார்த்தசாரதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு துளசி பிரசாரம் வழங்கப்பட்டது. முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு வெளியே சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்புகுளத்தூரில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள், ரத்தின அங்கி அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைதொடர்ந்து, திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

அதிகாலை 5:30 மணிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எண்ணூர் அனல்மின் நிலையம் அருகே உள்ள சிவா விஷ்ணு கோவிலிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படடு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story