திண்டிவனம் அருகே, மனைவியை அடித்து துன்புறுத்திய அடகு கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
திண்டிவனம் அருகே மனைவியை அடித்து துன்புறுத்திய அடகு கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவிரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). இவர் திண்டிவனத்தில் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது இவருக்கும் அதே கடையில் வேலை செய்து வந்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்த ஜெயந்திக்கும் (35) பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
பின்னர் இருவரும் கடந்த 2013-ல் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஜெயந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜெயந்தியை தனது குடும்பத்தில் சேர்க்காமல் தனியாக வாடகை வீடு எடுத்து அவருடன் தமிழ்செல்வன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயந்தியை கடந்த 1.7.13 அன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டுச்சென்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது மனைவியை பார்க்க வரவில்லை. இதனிடையே ஜெயந்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது கணவர் தமிழ்செல்வனின் கடைக்குச்சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், தனது மனைவி ஜெயந்தியை சாதி பெயரைச்சொல்லி தகாத வார்த்தையால் திட்டியதோடு அவரை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஜெயந்தி, இதுகுறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் தமிழ்செல்வன் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றம் சாட்டப்பட்ட தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை தமிழ்செல்வன் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்செல்வன் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story