கோவையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் அலைமோதிய பொதுமக்கள்
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததை தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம் போல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் நன்நடத்தை விதிமுறை காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாததால், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம், மனுவாக அளிக்க முடியவில்லை.
இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை போட்டு விட்டு சென்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன.
தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இனி பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 3 வாரங்களுக்கு பின்னர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் கோவை மாநகர் மட்டுமின்றி மேட்டுப்பாளையம், காரமடை, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் மனு கொடுக்க வரும் பொதுமக்களை முழுவதும் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதித்தனர். பொதுமக்கள் கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை போலீசார் நுகர்ந்து பார்த்து பரிசோதித்தனர்.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 209 மனுக்கள் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜாமணி அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஏராளமானோர் மனு கொடுக்க குவிந்ததால், கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதன்காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.
Related Tags :
Next Story