2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை


2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை
x
தினத்தந்தி 8 Jan 2020 5:00 AM IST (Updated: 7 Jan 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் சேவைக்காக 2-ம் கட்ட பணியில் மாதவரம்-தரமணி இடையே 21 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்க முதல் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டு உள்ளது. இந்தப்பணியை வரும் ஜூன் மாதம் தொடங்கி 4 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த ஆண்டு முதல் இந்தப்பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் வரையில் விரிவாக்கப்பணிகள் நிறைவடைந்து வரும் மே மாதம் போக்குவரத்தை தொடங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

தற்போது 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் ரூ.80 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப் படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் பணிக்காக 162 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் 800 வீடுகள் மற்றும் நிலங்களும் அடங்கும். இதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகளில் கடந்த ஆண்டே தொடங்கி, மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது மாதவரம்-தரமணி இடையே சுரங்கரெயில் பாதை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் முதல் கட்டமாக 2 வழிப்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக 3 வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதல் வழிப்பாதை மாதவரம்-சிறுசேரி இடையே 45.8 கிலோ மீட்டர், 2-வது வழிப்பாதை கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி இடையே 26.1 கிலோ மீட்டர், 3-வது வழிப்பாதை மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 44.6 கிலோ மீட்டர் உள்பட 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது 2-வது கட்டத்திற்கான கட்டுமான பணியின் முதல் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டு உள்ளது. மாதவரம்-தரமணி இடையே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பானதாகும். இதில் மாதவரம்-கெல்லீஸ் 9 கிலோ மீட்டர் தூரம் ஒரு கட்டமாகவும், கெல்லீஸ்-தரமணி இடையே 12 கிலோ மீட்டர் தூரம் அதாவது 21 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2-வது கட்ட பணிகள் நடக்க இருக்கிறது. இந்தப்பணி வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கி 1,460 நாட்கள் அதாவது 4 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மாதவரம் பால் பண்ணை, தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங்ரோடு சந்திப்பு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை.

ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை மெட்ரோ, அடையாறு சந்திப்பு, அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர் மெட்ரோ, தரமணி இணைப்பு சாலை ஆகிய இடங்கள் வழியாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. அத்துடன் இந்த இடங்களில் எல்லாம் ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

இந்தப்பாதைக்கு கடந்த ஆண்டு ஆரம்ப கட்டப்பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தட பாதை பணிகள் முடிந்ததும் அங்கு டிரைவர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரெயில் ஓடும். இதற்காக ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் அதிநவீன சாப்ட்வேர் மற்றும் சிக்னல் வசதி, 16 கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டறை மூலம் கண்காணிக்கப்பட்டு இயக்கப்படும்.

இதற்காக 254 நவீன மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படு கிறது. இந்த வழித்த டபாதையில் தினசரி 45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள், பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரெயில் புதுமை யான அனுபவத்தைத் தரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story