வெறுப்பு அரசியலின் புகலிடமாக பல்கலைக்கழகங்கள் மாறக்கூடாது ; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு


வெறுப்பு அரசியலின் புகலிடமாக பல்கலைக்கழகங்கள் மாறக்கூடாது ; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 8 Jan 2020 5:30 AM IST (Updated: 8 Jan 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

வெறுப்பு அரசியலின் புகலிடமாக பல்கலைக்கழகங்கள் மாறக்கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பெங்களூரு,

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் வெள்ளி விழா பெங்களூரு கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் துைண ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விழாைவ தொடங்கி வைத்து பேசியதாவது:-

பல்கலைக்கழகங்களில் அனைத்து வகையான கருத்துகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நமது குழந்தைகள், கல்வி நிலையங்களில் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய பிறகு, மக்களுக்கு போதிக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் தான் நமது ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தின் அடிப்படை தத்துவத்தையும் பாதுகாக்கிறார்கள். ஆனால் வெறுப்பு அரசியலின் பாதுகாப்பான புகலிடமாக பல்கலைக்கழகங்கள் மாறக்கூடாது.

பல்கலைக்கழகங்களில் கல்வி ஆராய்ச்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த நடவடிக்கைகள் தான் முக்கியத்துவம் பெற வேண்டும். கோஷ்டி பூசல், பிளவுபடுத்தும் எண்ணங்கள் இருக்கக்கூடாது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி வளங்களை கொண்டது. அது நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஆபத்தானதும் கூட, நாம் ஒரு சமுதாயமாக, இத்தகைய ஆபத்துகளை தாங்க தயாராக வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தரவரிசை பட்டியலில் இந்தியா கீழ் நிலையில் உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. 2000-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இருந்தபோதிலும் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் (பி.எச்.டி.) பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் பிறந்த ஒரு லட்சம் பேர் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் பணியாற்றுகிறார்கள்.

திறமை வாய்ந்த அவர்களில் சிலரையாவது நல்ல வாய்ப்புகள் மற்றும் ஊக்கப்பரிசு அளித்து நாம் சொந்த நாட்டுக்கு திரும்ப வைக்க முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை வேகம் பெறும். இந்தியாவில் பட்டம் பெறுபவர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்று இந்திய திறன் அறிக்கை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது கவலை அளிக்கக்கூடியது.

கல்வியுடன் தேவையான திறன், வாழ்க்கை திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். நமது உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த அவற்றுக்கு இந்த தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் வழிகாட்டியாக, நண்பராக செயல்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

முன்னதாக கத்ரிகுப்பேவில் உள்ள வித்யாபீடத்தில் மறைந்த பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் சமாதியில் வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பசவனகுடியில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகளுக்கு உணவு விநியோகம் செய்யும் ஆம்யா சேதனா நிறுவனத்திற்கு வந்த வெங்கையா நாயுடு, அங்கு அமைக்கப்பட்டுள்ள பசுமை சமையல் கூடத்தை பார்வையிட்டு பாராட்டினார். அந்த நிறுவனத்தை, மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி அனந்தகுமார் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story