பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடுகட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்க மனசு' திட்டம் தொடக்கம்


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடுகட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்க மனசு திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2020 4:45 AM IST (Updated: 8 Jan 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களின் நிலஉடைமை மற்றும் குடியிருப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் அரசால் வழங்கப்படும் மானிய தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், கழிப்பறை மானியம் ரூ.12 ஆயிரம், ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.20 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் போதுமானதாக இல்லை. இதனால் உள்ளூரில் உள்ள புரவலர்கள் தாமாக முன்வந்து ஏழை பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களை தமது பொறுப்பில் ஏற்றுக் கொள்ளும் திட்டமே ‘தங்க மனசு‘ திட்டம் ஆகும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு வேலையைத் தொடங்கி பணமின்றி பாதியில் நிற்கும் அல்லது கட்டுமானம் தொடங்க இயலாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டத்தின் கீழ் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தாலும் யாருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் இருக்கும் தங்கமனசுக்காரர்களைக் கண்டறிந்து பயனாளிகள் பயன்பெற வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இந்த திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு ‘தங்கமனசு‘ திட்டத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘தங்கமனசு‘ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமூக பொறுப்பு நிதி மூலம் அல்லது அவர்களது சொந்த செலவில் வீடுகள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து பல்வேறு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வீடு கட்ட முடியாமல் தேக்க நிலையில் உள்ள வீடுகள் மற்றும் பயனாளிகளின் விவரம் உள்ளது. அவர்களுக்கு உதவ விரும்பும் புரவலர்கள், வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தையும், மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தையும் 0461-2340575, 73737 04229, 94431 47321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story