நகை பறிப்பு முயற்சியில் முதியவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
போரிவிலியில் நகை பறிப்பு முயற்சியில் முதியவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
போரிவிலியில் நகை பறிப்பு முயற்சியில் முதியவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை போரிவிலி ராய் டோங்கிரி பகுதியை சேர்ந்த முதியவர் துக்காராம் பாட்டீல்(வயது69). இவர் நேற்றுமுன்தினம் காலை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென துக்காராம் பாட்டீலின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் நகை பறிக்க முயன்ற வாலிபரின் சட்டைக் காலரை பிடித்துக் கொண்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். ஆனால் துக்காராம் பாட்டீல் அவரை விடவில்லை.
அப்போது இருவரும் சாலையில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து துக்காராம் பாட்டீலின் கையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் காயம் அடைந்த துக்காராம் பாட்டீல் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த வாலிபர் போரிவிலி தேவிபாடாவை சேர்ந்த சிவா ஹரிஜன்(வயது20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story