மாணவர்கள் போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்' பதாகை: பட்னாவிஸ்- ஜெயந்த் பாட்டீல் இடையே டுவிட்டரில் மோதல்


மாணவர்கள் போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர் பதாகை: பட்னாவிஸ்- ஜெயந்த் பாட்டீல் இடையே டுவிட்டரில் மோதல்
x
தினத்தந்தி 8 Jan 2020 5:46 AM IST (Updated: 8 Jan 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

‘கேட்வே ஆப் இந்தியா’வில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுதந்திர காஷ்மீர் வாசகம் அடங்கிய பதாகை இடம் பெற்றிருந்தது தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மந்திரி ஜெயந்த் பாட்டீலும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.

மும்பை, 

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, மும்பையில் உள்ள ‘கேட்வே ஆப் இந்தியா’வில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது கையில் ‘சுதந்திர காஷ்மீர்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும், தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜெயந்த் பாட்டீலும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.

போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்' பதாகையை பெண் ஒருவர் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘உண்மையில் இந்த போராட்டம் எதற்காக? சுதந்திர காஷ்மீர் கோஷங்கள் ஏன்? மும்பையில் இத்தகைய பிரிவினைவாத கூறுகளை நாம் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்? முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் எழுப்பப்படும் இந்த கோஷங்களை உத்தவ்ஜி... நீங்கள் பொறுத்து கொள்ளப்போகிறீர்களா? என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி ஜெயந்த் பாட்டீல், தேவேந்திரஜி... காஷ்மீரில் செல்போன் நெட்வொர்க் தடை மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாடு ஆகிய பாகுபாடுகளில் இருந்து விடுவிக்க வேண்டி தான் இந்த சுதந்திர காஷ்மீர் கோரிக்கை.

உங்களை போன்ற பொறுப்பான தலைவர் வெறுப்புடன் வார்த்தைகளை குறிப்பிட்டு மக்களை குழப்ப முயற்சிப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது அதிகார இழப்பா? அல்லது சுய கட்டுப்பாடு இழப்பா? என்ன ஒரு பரிதாபம் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த பட்னாவிஸ், ஜெயந்த்ராவ்... இந்த வாக்கு வங்கி அரசியலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. காஷ்மீர் ஏற்கனவே பாகுபாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாடு தான் முக்கியம் என்பது எங்களது கொள்கை என்று குறிப்பிட்டார்.

Next Story