வாணியம்பாடி அருகே, மலை கிராமத்திற்கு கழுதையில் சென்ற பொங்கல் பரிசு பொருட்கள்


வாணியம்பாடி அருகே, மலை கிராமத்திற்கு கழுதையில் சென்ற பொங்கல் பரிசு பொருட்கள்
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 8 Jan 2020 3:03 PM GMT)

வாணியம்பாடி அருகே மலை கிராமத்திற்கு பொங்கல் பரிசு பொருட்கள் கழுதை மூலம் எடுத்து செல்லப்பட்டது.

வாணியம்பாடி, 

வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும் நியாய விலை கடைக்கு ரே‌ஷன் பொருட்கள் வாங்கவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு வாங்குவதற்கும் நெக்னாமலை கிராமத்தில் இருந்து மலையடிவாரம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து, பின்னர் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பெற்றுக்கொண்டு இருந்தனர்.

தற்போது திருப்பத்தூர் மாவட்டம் பிரித்த பின்னர் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சிவன்அருள் உத்தரவின் பேரில் பொங்கல் பரிசு பொருட்களை முதல் முறையாக வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் பொங்கல் பரிசு பொருட்களை மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை சிறு, சிறு மூட்டையாக கட்டி 12 கழுதைகள் மூலமாக மலையடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் சாலை வசதி இல்லாத நெக்னாமலை கிராமத்தில் உள்ள 200 குடும்ப ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க எடுத்து செல்லப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் பொது வினியோகத்திட்ட துணை பதிவாளர் வசந்த லட்சுமி, கூட்டுறவு சங்கத்தலைவர் திருப்பதி, செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் வரதராஜ், சிவானந்தம், மணி, முனிசாமி, விற்பனையாளர் பிரேமா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story