உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகை செலுத்தாத கடைகளின் பதிவு சான்றிதழ் ரத்து - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை


உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகை செலுத்தாத கடைகளின் பதிவு சான்றிதழ் ரத்து - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-08T22:15:14+05:30)

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகையை செலுத்தாத கடைகளின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர், 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையாளரின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலருக்கு உணவு பாதுகாப்பு தர சட்ட விதிகளை மீறும் உணவு வணிகர் களுக்கு அபராதம் விதிப் பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறு மளிகை கடைகள், நடமாடும் தள்ளுவண்டி கடைகள், தற்காலிகமாக கடை நடத்துபவர்களிடம் சோதனை நடத்தும் போது முதல் முறை குற்றம் புரிந்தால் ரூ. ஆயிரமும், 2-ம் முறை ரூ.2 ஆயிரமும், 3-ம் முறை ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆண்டிற்கு ரூ.12 லட்சத்திற்கும் கீழ் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் குறு, சிறு தயாரிப்பாளர்கள் முதல்முறை குற்றத்தில் ஈடுபட்டால் அபராத தொகை ரூ.3 ஆயிரமும், 2-ம் முறை ஈடுபட்டால் ரூ.6 ஆயிரமும், 3-ம் முறை ஈடுபட்டால் ரூ.10 ஆயிரமும் என அபராதம் விதிக்கப்படும். 3 முறைக்கு மேல் அதே குற்றம் செய்தால் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் பால் விற்பனை செய்பவர்கள், இறைச்சி விற்பனை செய்பவர்கள் முதல் முறையாக உணவு பாதுகாப்பு சட்ட மீறல் குற்றம் புரிந்தால் ரூ.2 ஆயிரமும், 2-ம் முறை ரூ.4 ஆயிரமும், 3-ம் முறை குற்றம் புரிந்தால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.மேலும் பதிவு சான்றிதழ் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்த அபராத தொகையை 3 வேலை நாட்களுக்குள் செலுத்துச்சீட்டு மூலம் அரசு கணக்கில் வங்கியில் செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் உணவு வணிகத்தின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். உணவுப்பொருட்களின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்படும்.

உணவுப்பொருட்களில் கலப்படம், கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறம் கலந்த உணவு பொருட்கள், தரமற்ற உணவு, தரம் குறைவு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது பற்றியும் பொது மக்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story