மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்; பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு


மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்; பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Jan 2020 10:45 PM GMT (Updated: 8 Jan 2020 5:06 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

மைசூரு, 

மைசூருவில் நேற்று பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் சொத்து களுக்கும், அரசு சொத்து களுக்கும் யாரும் சேதம் விளைவிக்கக் கூடாது. அவ்வாறு சேதம் விளைவிப்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டங்களின் போது அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பா பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி 303 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார். அவர் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவருடைய சீர்மிகு ஆட்சியால் மக்கள் செழுமை அடைந்து வருகிறார்கள். நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு ஜாதி சங்கத்திற்கும் தனி நீதிகள் இயற்றப்படவில்லை. இந்தியா ஒரு நாடுதான்.

மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களின் சுய லாபத்திற்காக யாரும் பிளவுபடுத்தவும், போராட்டத்தில் ஈடுபடவும் வேண்டாம்.

குறிப்பாக பிரதமர் மோடி குறித்தோ, மத்திய - மாநில பா.ஜனதா ஆட்சி குறித்தோ யாரும் விமர்சிக்க வேண்டாம். மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முஸ்லிம் மக்களிடம் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றன. அந்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் மக்களிடைய குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story