முழுஅடைப்பு போராட்டத்தால் கர்நாடகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை; போலீஸ் மந்திரி பேட்டி
தொழிற்சங்கங்கள் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தால் கர்நாடகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மங்களூரு,
கர்நாடக போலீஸ் மந்திரியும், உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பசவராஜ் பொம்மை நேற்று உடுப்பிக்கு வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் மங்களூருவுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வந்து பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவது அரசியலமைப்புக்கு விரோதமானது. காங்கிரசின் கோரிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. ஐவான் டிசோசா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது அவருடைய உடலுக்கு நல்லது.
நான் உடுப்பி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறிய அணைகளையும், தடுப்பணைகளையும் தூர்வாரக்கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அணைகளின் கரைகளில் இருந்து மண் விற்ற வகையில் மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.90 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
அந்த பணத்தை தூர்வாரும் செலவுகளுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உடுப்பி மாவட்டத்தில் 1.39 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவைகள் விரைவில் முடிக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் குறைவாக உள்ளன. விரைவில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தொழிற்சங்கங்கள் நடத்திய முழுஅடைப்பு போராட்டம் கர்நாடகத்தில் பிசுபிசுத்தது. எந்தவொரு இடத்திலும் எந்தவித அசம்பாவிதங்களும், கடை அடைப்புகளும் நடைபெறாமல் கட்டுப்படுத்தினோம். போராட்டங்கள் நடத்த மட்டுமே அனுமதி வழங்கினோம். அதனால் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் மட்டும் ஈடுபட்டனர். மற்றபடி முழுஅடைப்பு போராட்டத்தால் கர்நாடகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story