தொழிற்சங்கங்கள் சார்பில்,19 இடங்களில் சாலை மறியல்; 730 பேர் கைது


தொழிற்சங்கங்கள் சார்பில்,19 இடங்களில் சாலை மறியல்; 730 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 4:00 AM IST (Updated: 8 Jan 2020 11:29 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் 19 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் நடந்தது. இதில் 730 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் தொழிற்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அதன்படி தேனி, பெரியகுளம், போடி, கம்பம் உள்பட 19 இடங்களில் சாலை மறியல் நடந்தது. தேனியில் நேரு சிலை சிக்னல் அருகில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். அதன்பிறகு மறியலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

சின்னமனூர் அருகே புலிகுத்தியில் சாலை மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர். கோம்பை பஸ் நிறுத்தம் அருகில் மறியல் செய்த 26 பேர் கைதாகினர். கோம்பை அருகே பண்ணைப்புரத்தில் மறியல் செய்த 18 பேரும், ஓடைப்பட்டியில் மறியல் செய்த 35 பேரும், தேவதானப்பட்டி அரிசிக்கடை சந்திப்பில் மறியல் செய்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் போடி தேவர் சிலை முன்பு மறியல் செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் மறியல் செய்த 37 பேரும், தேவாரம் பஸ் நிலையம் அருகில் மறியல் செய்த 38 பேரும், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை விலக்கில் மறியல் செய்த 37 பேரும், சிலமலையில் மறியல் செய்த 32 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு மறியல் செய்த 79 பேரும், கடமலைக்குண்டு மெயின் பஜாரில் மறியல் செய்த 19 பேரும், ஜெயமங்கலத்தில் மறியலில் ஈடுபட்ட 18 பேரும் கைது செய்யப்பட்டனர். குள்ளப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். தென்கரை காந்தி சிலை முன்பு மறியல் செய்த 15 பேரும், காமயகவுண்டன்பட்டியில் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கம்பம் பழைய தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மறியல் செய்த 35 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் மறியல் செய்த 40 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் 19 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 730 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 137 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மறியல் நடந்த இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 More update

Next Story