மத்திய அரசை கண்டித்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது - பஸ்கள் வழக்கம் போல் ஓடின


மத்திய அரசை கண்டித்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது - பஸ்கள் வழக்கம் போல் ஓடின
x
தினத்தந்தி 9 Jan 2020 3:45 AM IST (Updated: 8 Jan 2020 11:29 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து நேற்று ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக தேனி மாவட்டத்தில் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது.

தேனி,

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது. தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதன்படி, நேற்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பொதுத்துறை வங்கி பணியாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன்படி தேனி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று பெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் மொத்தம் 125 உள்ளன. இங்கு சுமார் 500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால், வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கி பணிகள் முற்றிலும் முடங்கின. வங்கி ஊழியர்கள் மூலம் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் பாதிக்கப்பட்டன. வங்கிகள் வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் சுமார் ரூ.20 கோடி அளவில் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

பொது வேலை நிறுத்தத்தில் சத்துணவு, அங்கன்வாடி, மின்வாரிய ஊழியர்களும், வருவாய்த்துறை, பி.எஸ்.என்.எல். ஊழியர்களும் பங்கேற்றனர். 414 சத்துணவு ஊழியர்களில் 85 பேரும், 812 அங்கன்வாடி ஊழியர்களில் 66 பேரும், 1,150 மின்வாரிய ஊழியர்களில் 600 பேரும், வருமான வரித்துறையில் பணியாற்றும் 9 பேரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 88 பேர் பணியாற்றும் நிலையில், 4 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கல்வித்துறையில் மொத்தம் 6,463 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 41 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 47 முதன்மை தபால் நிலையங்கள் மற்றும் 174 கிராமப்புற தபால் நிலையங்கள் உள்ளன. கிராமப்புற தபால் நிலையங்கள் தவிர்த்து 47 முதன்மை தபால் நிலையங்களில் மொத்தம் 130 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 120 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், தேனி உள்பட பல்வேறு இடங்களில் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டு இருந்தன.

மாவட்டம் முழுவதும் தபால் துறை சேவைகள் முடங்கின. தபால் பட்டுவாடாவும் பாதிக்கப்பட்டது. தபால் ஊழியர்கள் தேனி தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல், மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி. ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி பிச்சைமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் பஸ்கள் பணிமனையில் இருந்து வெளியேறின. கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. தேனி நகரில் புதன்கிழமை தோறும் சில கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஓரிரு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மற்றபடி அனைத்து வித பொருட்கள் வாங்குவதற்கான கடைகளும் திறந்தே இருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. 

Next Story